> அரியநேந்திரன் தமிழினத்தின் துரோகியா? அரியநேந்திரனின் மறு பக்கம்

அரியநேந்திரன் தமிழினத்தின் துரோகியா? அரியநேந்திரனின் மறு பக்கம்

 தற்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் பரபரப்பு செய்திகளுக்கு குறைவில்லை. தமிழர்களுக்கான உரிமையினை மீட்டெடுக்க தீர்வுப்பொதிதேடிப் புறப்பட்டவர்கள் இன்று தங்களது அதிகாரச் சண்டைக்கான தீர்வினைக்கூட எட்டமுடியாமல் தங்களுக்குள் முட்டி மோதி காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.



தமிழரசுக் கட்சிக்குள் சில புதியவர்களின் வருகை கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த தேசியப் பற்றாளர்கள் பலரை வெளியேற்றியுள்ளது.


இவர்கள் அனைவரும் சந்தர்ப்பம் பார்த்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்த பலர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் நன்கு திட்டமிட்டு சந்தர்ப்பம் பார்த்து வெளியேற்றப்பட்டுள்ளார்.


பா.அரியநேந்திரன் கட்சியின் கொள்கைகளையும், யாப்பு விதிகளையும் மீறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுகின்றனர் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்.


இலங்கையில் மாறிமாறி ஆட்சிப் பீடமேறிவரும் பேரினவாதக் கட்சியிகள் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை எள்ளளவுகூட கணக்கிலெடுப்பதோ தமிழர்களின் பிரச்சசினைகள் பற்றி பேசுவதற்கோ எந்த அரசாங்கங்களும் தயார் நிலையில் இருந்ததுமில்லை.


பொருளாதாரப் பிரச்சினை ஒரு பக்கம், அரசியல் பிரச்சினை ஒரு பக்கம், மக்கள் போராட்டங்கள் ஒரு பக்கமென்று உலக நாடுகள் அனைத்தும் இலங்கையை உற்று நோக்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.


ஜனாதிபதித் தேர்தலை உலக நாடுகள் அனைத்துமே உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தன. 


இந்த நேரத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் உலகறியச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகவும், பேரினவாதக் கட்சிகளை தமிழ் மக்கள் வெறுக்கின்றனர், தமிழர்கள் ஒன்று பட்டு தமிழர்களுக்கான தீர்வினையே எதிர்பார்க்கின்றனர் என்ற செய்தியினையும் உலகிற்கு சொல்லவேண்டிய நல்லதொரு சந்தர்ப்பம் மாத்திரமல்லாது தமிழர்களின் ஒற்றுமையை பேரினவாதக் கட்சிகளுக்கு காட்டவேண்டிய தருணமும் இதுவாகவே இருந்தது.


தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கும் தமிழ் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் களமிறக்கப்பட்டார். 

தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் 226,343  வாக்குகளைப் பெற்று தமிழர்களின் ஒற்றுமையை உலகறியச் செய்திருந்தார் அரியநேந்திரன்.


தங்களது கட்சியின் யாப்பு விதிகள், கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டார் என்பதனாலேயே கட்சியிலிருந்து அரியநேந்திரனை நீக்கியதாக அவ்வப்போது ஊடகங்களில் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர் தமிழரசுக் கட்சியினர்.

 அரியநேந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு மாதங்கள் கடந்துகொண்டிருக்கின்றன. அரியநேந்திரனை கட்சியில் மீண்டும் இணைப்பதற்கான எந்த முயற்சியினையும் தமிழரசுக் கட்சியினர் எடுத்ததாகத் தெரியவில்லை. 

அரியநேந்திரனை வெளியேற்றியமை தொடர்பில் நாங்கள் ஒரு தடவை சொன்னால் 100 தடவை சொன்னமாதிரி என்பதுபோல் ஒரு தடவை சொன்னால் சொன்னதுதான் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் செயலாளருமான சுமந்திரன் அண்மையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 


அரியநேந்திரனை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது தொடர்பில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கவனம் செலுத்தி  மீண்டும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.


விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் வந்த சுமந்திரன் போன்றோருக்கு அரியநேந்திரனின் தியாகங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அத்தியாகங்களின் பெறுமதி தெரியப்போவதுமில்லை.


விடுதலைப் போராட்டத்திற்கு அரியநேந்திரன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தியாகங்களைச் செய்த ஒருவர். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் தமிழர்களின் விடியலுக்காக பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடு களத்தில் நின்று பணியாற்றியவர்.


புலிகள், கருணா பிளவின்போது பிரிவினைத் தடுக்கவும், போராளிகளைக் காப்பாற்றவும் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். 


புலிகள் - கருணா பிழவின்போதும் இறுதி யுத்த காலத்தின்போதும் பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தபோதும் எதற்கும் அஞ்சாது தமிழ் தேசியத்திற்காகவும், தமிழரசுக் கட்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஒருவரை தூக்கி எறிந்துவிட்டு அறிக்கைகளோடு காலத்தைக் கடத்துவதுதமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.