"பேருந்து கட்டணங்களை விட தொடருந்து கட்டணங்கள் மூன்றில் ஒரு பங்கு குறைவாக பேணுவதற்கு கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்'' என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(24.05.32023)நாடாளுமன்றில் கருத்து வெளியிடும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடருந்து திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கான காலம் மலர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், ''தொடருந்து திணைக்களம் 2021 ஆம் ஆண்டு 2.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதுடன், மேலதிக நேர கொடுப்பனவாக 2.3 பில்லியன் ரூபாவும் சம்பளங்களுக்காக ஏழு பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டுகளில் 10 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை ஈடு செய்வதற்கு வேண்டுமாயின் தொடருந்து திணைக்களத்தின் செயல் திறனற்ற தன்மை நீக்க வேண்டும். அதுவே இதற்கான தீர்வாகும்''.
டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் தீர்வுகளை எட்ட முடியும். தொடருந்து பயணச்சீட்டு விநியோகம்? ஆசன ஒதுக்கீடு போன்ற அனைத்தையும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் மயப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
அதன் பின்னர் கட்டணங்களை ஒப்பீடு செய்து பஸ் கட்டணங்களை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான கட்டணங்களாக பேணுவதற்கு தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுப்பது மிகவும் சிரமமானது. எனவே இந்த நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களத்தை தொடருந்து அதிகார சபையாக மாற்ற வேண்டும்.
இது தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சட்டமூலம் ஒன்றை உருவாக்கப்பட்டது. அவற்றை தேவையான வகையில் மாற்றி தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் திருத்தங்கள் குறித்து பேசப்படும், நாட்டின் எதிர்காலத்திற்காக இதற்கு ஒத்துழைப்பு வழங்க வருமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.