இரட்டை கொலை புரிந்த, ஆயுத கொள்ளையில் ஈடுபட்ட, ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த, ஆயுதக்குழு உறுப்பினருக்கு இரட்டை மரண தண்டனையும், 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (30.05.2023) வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தன் பின்னர் எதிரியான முன்னாள் ஆயுததாரி இராணுவத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தார்.
அப்போது இராணுவத்தின் T56 ரகத் துப்பாக்கியைத் திருடி, 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி, வவுனியா - சமளங்குளம் பகுதியில் இரு வீடுகளுக்குள் அத்துமீறி, ஆயுதங்களுடன் உள் நுழைந்து அங்கிருந்த ஏழு பெண்களின் நகைகளை கொள்ளையிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் ஒரு பெண்ணின் கணவர் கூக்குரலிட்டுள்ளார்.
அப்போது எதிரியான முன்னாள் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிரி வட்டுக்கோட்டையில் தலைமறைவான இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதி நான்கு நகைக் கடைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
எதிரியை வவுனியாவுக்கு அழைத்து வந்த பொலிஸார் எதிரியை விசாரணை நடத்தி பட்டைக்காட்டுக் குளத்தில் ஒன்றரை அடி தண்ணீர் குளத்தில் இருந்து T56 ரகத் துப்பாக்கி மீட்கப்பட்ள்ளது.
எதிரிக்கு எதிராக இரட்டைக்கொலை, ஏழு கொலை குற்றச்சாட்டு, இரு வீட்டில் அத்துமீறி உட்புகுந்தமை என 11 குற்றச்சாட்டுக்களைச் சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எதிரியிடம் இருந்த துப்பாக்கி தனது துப்பாக்கி என இராணுவ உறுப்பினர் காட்சியளித்துள்ளார்.
மிக முக்கியமாகக் கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் எதிரியிடம் இருந்து சுடப்பட்ட துப்பாக்கியில் இருந்து பெறப்பட்டவை என இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளதையடுத்து, எதிரியைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மேல்நீதிமனற் நீதிபதி மேற்படி தண்டனையை வழங்கியுள்ளார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நகைகள், வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் சான்று பொருள் காப்பாளரிடம் வழங்கப்பட்டபோது அவர் நகைகளைத் திருடி வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.
குறிப்பிட்ட நபரை நாடு கடத்தல் உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு நீதிபதி இளஞ்சுழியன் பரிந்துரை செய்துள்ளார்.
குறித்த வழக்கை அரச சட்டத்தரணிகளான தர்சிக்கா திருக்குமாரநாதன் அவருடன் ஆறுமுகம் தர்ஷன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளனர்.