> நாம் பிரதேசவாதிகளோ வடக்கு மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல - பிள்ளையான்

நாம் பிரதேசவாதிகளோ வடக்கு மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல - பிள்ளையான்

 நாம் பிரதேசவாதிகளோ வடக்கு மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல யாழ் மேலாதிக்கவாதிகளுக்கே எதிரானவர்கள் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 

வெருகல் படுகொலையின் 19 வது ஆண்டு நினைவு தினத்தில் ஆற்றிய பேருரையிலே இவ்வவாறு குறிப்பிட்டுள்ளர்.



மேலும் அவ்வுரையில்....

வெருகல் வீரர்களின் தாய்மார்களே!சகோதர சகோதரிகளே! பெரியோர்களே!பொதுமக்களே!தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களே! கட்சியை காத்து நிற்கும் போராளிகளே!மற்றும் ஆதரவாளர்களே! உங்களனைவருக்கும் மாலை வணக்கங்கள்.
இன்று இந்த சிவப்புச் சித்திரை நினைவுகளுக்காய் நாம் இங்கே கூடியுள்ளோம். இந்த வெருகல் படுகொலையிலே உயிர்நீத்த எம் தோழர்களுக்காக, இங்கே இந்த மண்ணிலே செந்நீர் சிந்தி ஆகுதியாகிய அந்த ஆன்மாக்களுக்காக, சிவப்பு சித்திரை தினமாகிய இன்று நாம் இந்த வெருகல் மலை பூங்காவில் நாம் கூடியிருக்கின்றோம்.
நீங்கள் எல்லோரும் அறிந்ததுபோல் இந்த மண்ணிலே நடந்தேறிய அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம். ஆம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் நம் நினைவுகளிலிருந்து யாராலும் அழித்துவிட முடியாது. அந்த வெருகல் படுகொலையின் பத்தொன்பதாவது வருடம் நினைவு தினம் இன்றாகும். அந்தப் படுகொலை நடந்த நாட்களை, அதன் கொடூரங்களை, நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. இந்த வெருகல் படுகொலையைத் தொடர்ந்து கிழக்குப்போராளிகளை தேடித்தேடி கொன்றொழித்த நாட்களை எப்படி நாம் மறக்கமுடியும்? உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு கொழும்பிலே தஞ்சமடைந்த போராளிகளை நஞ்சூட்டிக்கொன்ற அந்த நினைவுகள் எவ்வளவு கொடுமையானவை? நித்திரைப்பாயிலே ரெஜி அண்ணனை சுட்டுக் கொன்ற கொடூரம் எத்தகையது? தலைவரின் வாக்குறுதியை நம்பி மனந்திரும்பி சரணடைந்த தளபதிகளான துரை, விசு, ஜிம்கலித்தாத்தா....அனைவரையும் ஒரே மடுவுக்கும் உயிருடன் குவித்து சுட்டுத்தள்ளிய காட்டுமிராண்டித்தனம் அவ்வளவு இலகுவாக மறந்துவிடக்கூடியதா? தளபதி நிலாவினியுடன் சரணடைந்த பெண்போராளிகளுக்கு என்ன நடந்தது என்று யாரிடமாவது பதிலிருக்கின்றதா? இத்தனைக்கும் அந்த ஆதிக்கத்திமிர்த்தானே காரணம்? இதுபற்றி இந்த ஆதிக்கத்தின் தோற்றுவாயான 'யாழ் மேலாதிக்கம்' பற்றி நாம் பேசுவதை சுட்டிக்காட்டும் பலர் எம்மை பிரதேசவாதிகள் என்கின்றனர்.
நாம் ஒருபோதும் பிரதேசவாதிகள் அல்ல. நாம் ஒருபோதும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டிருப்பவர்களும் அல்ல. எனது 14 வருட போராட்ட வாழ்வில் பல வருடங்களை வடக்கு மண்ணைக்காப்பதற்காக அர்ப்பணித்தவன் நான். என்னைப்போல ஆயிரக்கணக்கான கிழக்குப் போராளிகளின் வாழ்வு அந்த மண்ணிலே முடிந்துபோன வரலாறு உண்டு. அப்படியிருக்க நாங்கள் எப்படி பிரதேச வாதிகளாக இருக்க முடியும்?
யாழ்- மேலாதிக்க கருத்தியலே எமது எதிரியாகும். அந்த மேலாதிக்க கருத்தியலுடன் எமது மக்களை ஆதிக்கம் செய்ய முனையும் அரசியல்வாதிகளே எமது எதிரிகள் ஆகும் என்பதை மிகமிக அழுத்தமாக தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
உழைக்கும் மக்களின் நலனை, ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நலனை,ஏழை எளிய பாமர மக்களின் நலனை குறிக்கோளாகக்கொண்டு நாம் செயற்படுகின்றோம். பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்த ஒரு இனமாக எமது மக்களை கட்டியெழுப்ப வேண்டுமென்று நாள் தோறும் பாடுபடுகின்றோம். ஓய்வு ஒழிச்சல் இன்றி அரசியல் பணி செய்யக்கூடிய செயற்திறன் மிக்க கட்சிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றோம்.
அதனால் தான் அரசியல் பழிவாங்கல்கள், காழ்ப்புணர்வும் கபட நோக்கமும் கொண்ட சேறடிப்புகள், ஈரோக்களுக்கும் டொலர்களுக்கும் விலைபோகும் ஊடகங்களின் இருட்டடிப்புகள் போன்ற அனைத்தையும் தாண்டி கிழக்கிலே நிராகரிக்க முடியாத சக்திகளாக எழுந்து நிற்க மக்கள் எமக்கு துணை நிற்கின்றனர்.
கிழக்கு மாகாணத்துக்கு என தனிக்கட்சி தேவையா? அது பிரதேசவாதம் இல்லையா? என்பது பலரது வாதமாயிருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியென்பது கிழக்குத்தலைமையின் அவசியத்தை முன்னிறுத்தும் கட்சிதான், நாம் கிழக்கு மாகாணத்தின் உரிமைப் பிரச்சனைகளிலிருந்து தோற்றம் பெற்றவர்கள் தான். ஆனால் இது கிழக்குமாகாணத்துக்கு மட்டும் உரிய கட்சியல்ல. .
தமிழ் மக்களின் உரிமை போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கான போராளிகளை ஆகுதியாக்கியவர்களின் தொடர்ச்சியில் வந்தவர்கள் நாங்கள். இங்கே போராட்டம் நடக்கும் போது கொழும்பிலும் லண்டனிலும் அவுஸ்ரேலியாவில் படித்துப்பட்டம் பெற்றுக்கொண்டு அனைத்தும் முடிந்தவுடன் இன்று வந்து 'போராட்டம்' என்றும் 'உரிமைக்குரல்' என்றும் மக்களை மடையர்களாக்கும் மேட்டுக்குடிகளின் ஏமாற்று அரசியலை அம்பலப்படுத்தி இல்லாதொழிப்பதே எமது கடமையெனக் கருதுகின்றோம்.
இன்று நாம் ஒரு பிராந்தியக் கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியென்பது தமிழ் மக்களின் கட்சியாகும். இலங்கையின் தமிழ் மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றார்களோ அவ்விடங்களை நோக்கி எதிர்காலத்தில் எமது புதிய அரசியல் பாதைகள் விரியும் என்பதை இந்த வெருகல் வீரர்களின் நினைவிடத்தில் நின்று தெரிவித்துக்கொள்கின்றேன்.