ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தோனி 20ஆவது ஓவரில் பேட்டிங் செய்கையில், ஜியோ சினிமா செயலியில் சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்திருக்கின்றனர். இது ஜியோ சினிமா வரலாற்றில் உச்சபட்ச பார்வையாளர்கள் எனும் ரெக்கார்ட் படைத்திருக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களில் 175 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
176 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டேவான் கான்வே 50 ரன்கள் மற்றும் ரஹானே 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். மொயின், துபெ, ராயுடு மூவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேற, சிஎஸ்கே அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது.
18 பந்துகளில் 54 ரன்கள் தேவை என இருந்தபோது, களத்தில் இருந்த தோனி மற்றும் ஜடேஜா ஜோடி 2 ஓவர்களில் 33 ரன்கள் சேர்த்தனர். 20ஆவது ஓவரில் 21 ரன்கள் தேவைபட்டது. சந்தீப் சர்மா வீசினார்.
தோனி பேட்டிங்கில் இருந்ததால், அழுத்தத்தில் முதல் இரண்டு பந்துகளை ஒயிடாக வீசினார். அடுத்த பந்தை சுதாரித்து யார்க்கர் வீச, தோனியால் அடிக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து மிரளவிட்டார் தோனி.
பின்னர் கடைசி பந்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது, பேட்டிங்கில் தோனி இருந்தார். இதுபோன்று இருந்த பல போட்டிகளில் சிக்ஸ் அடித்து வெற்றியும் பெற்றுதந்துள்ளார். ஆகையால் சந்தீப் சர்மா கூடுதல் அழுத்தத்துடன் காணப்பட்டார்.
கடைசி பந்தில் துல்லியமாக யார்க்கர் வீசி திணறக்க, சிஎஸ்கே அணியால் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தோனியை கட்டுப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சந்தீப் சர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜியோ சினிமாவில் சாதனை படைத்த தோனி:
ஜியோ சினிமா செயலி இந்த வருடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓடிடி(இணையம்) ஒளிபரப்பை செய்துவருகிறது. முதல் போட்டியில் இருந்தே நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கை கோடிகளில் இருந்து வருகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்துவந்தபோது, சுமார் 2.2 கோடி பேர் நேரலையில் பார்த்துவந்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியை அதிக பார்வையாளர்கள் இணைய நேரலையில் பார்த்தது என்கிற சாதனையை படைத்துள்ளது.
ஜியோ சினிமா செயலியில் அதிக நேரலை பார்வையாளர்கள் பார்த்த போட்டிகள் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை:
1. சென்னை*ராஜஸ்தான் – 2.2 கோடி
2. பெங்களூர்*லக்னோ – 1.8 கோடி
3. டெல்லி*மும்பை – 1.7 கோடி
4. சென்னை*லக்னோ – 1.7 கோடி
5. குஜராத்*சென்னை – 1.6 கோடி