> தற்போது எவ்வாறு 7 தற்கொலை குண்டுதாரிகளை கைதுசெய்ய முடியும்? கேள்வியெழுப்பிய பொன்சேகா

தற்போது எவ்வாறு 7 தற்கொலை குண்டுதாரிகளை கைதுசெய்ய முடியும்? கேள்வியெழுப்பிய பொன்சேகா

நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து தான் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு அவதானமும் செலுத்தப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் கூறியுள்ளதுடன், 100க்கு 99 சதவீதம் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த நிலையில், எவ்வாறு 7 பயங்கரவாத சந்தேக நபர்ளை நேற்று முன்தினம் கைதுசெய்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர், பாதுகாப்பு செயலாளர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்திருந்தார். அதன்போது, 100க்கு 99 சதவீதம் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், நேற்று முன்தினம் டுபாயில் இருந்து 5 சந்தேகநபர்களை கொண்டுவந்துள்ளனர். கண்டி பகுதியில் இருவரை கைதுசெய்தனர். இவர்கள் தற்கொலை குண்டுதாக்குதலுக்கு பயிற்சி பெற்ற நபர்கள், பாதுகாப்பு தொடர்பில் தெளிவு இல்லாதவர்கள் தற்போது பிரச்சினைகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினால் அனைத்து பிரச்சினைகளும் நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல.
இந்த பிரச்சினையை உடனடியாக இப்போது நிறைவுக்கு கொண்டுவர முடியாது. மூன்று வாரங்களுக்கு முன்னர்,100க்கு 99 சதவீதம் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரித்தால் தற்போது எவ்வாறு 7 தற்கொலை குண்டுதாரிகளை கைதுசெய்ய முடியும்? பயங்கரவாதிகள் செயற்பட்ட நாட்டில் வாழ்ந்து ஸ்ரீலங்கா மக்களுக்கு பழக்கம் உள்ளது.
எனவே அரசியல்வாதிகள் கூறும் விடயங்களுக்கு ஏமாற்றமடையாமல், அவதானத்துடன் இருப்பதுதான் சிறந்த விடயம் என்று நான் நினைக்கின்றேன். இந்த நிலை எவ்வளவு அவதானத்துக்குரியது என்றும் என்ன செய்ய வேண்டும் என்றும் நான் நாடாளுமன்றில் கூறினேன்.
எனினும் நாங்கள் கூறுவது அவர்களின் தலைக்குள் செல்லுகின்றதா என்பது தொடர்பில் பிரச்சினை காணப்படுகின்றது. அவர்கள் செயற்படுவதை பார்க்கும்போது, நாங்கள் கூறிய விடயங்களை புரிந்துகொண்டு இந்த விடயத்தை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் செயற்படுவதாக தெரியவில்லை.